/ Tamil Pulvarkal / இடைக்காடனார்

இடைக்காடனார்

  • இடைக்காடென்னும் ஊரிலுள்ளாராதலின், இவர் இப்பெயர்பெற்றார். இடைக்காடு என்பது பட்டுக்கோட்டை தாலூகாவில் உள்ளது. இவர் சாதியில் இடையர். இவர் கபிலருடைய தோழர்; மற்றப் புலவர்களிடத்தும் அன்புடையவர்; கவிசெய்யும் ஆற்றலில் மிக்கோர்; இவை, “முன்னமோர் நாணான் மாட மதுரையின் முழுது ணர்ந்தோன், பின்னமில் கபிலன் றோழன் பெயரிடைக் காடனென்போன், இன்னியல் வாணர்க் கெல்லா மிதவியோன் கவியான் மிக்கோன்”, “எனையந் தாதி சொன்னவன் கபிலன் றோழன்” (திருவால. 20 : 1, 11) என்பவற்றால் அறியலாகும். “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக், குறுகத் தறித்த குறள்” என்று திருக்குறளி னியல்பைப் புலப்படுத்திப் பாடியிருத்தலால், இவர் பெரும்பொருளைச் சிறுகவியில் அடக்கும் இயல்பினரென்பதும், சுருங்கச் சொல்லலென்னும் அழகில் மிக்க விருப்பமுடையவரென்பதும் புலனாகின்றன. ‘அரச! மலையினின்றிழிந்து ஆறுகள் கடலை நோக்குவது போலப் புலவர்கள் நின்னையே நோக்கினர்; நீ பகைவேந்தருடைய மண்களை நோக்கினை’ (42) என இந்நூலுள்ளும் வேறுவகையாக ஏனைத்தொகைநூல்களிலும் இவர் கூறியிருக்கும் உவமைகள் மதிக்கற்பாலன. இவருடைய செய்யுட்களை உற்றுநோக்குமிடத்துப் பெரும்பான்மையாக முல்லைத் திணை, மழை, இடைச்சாதி என்பவற்றின் இயல்புகளும் சிறுபான்மையாக மருதத்திணை வளமும் அமைந்திருப்பது விளங்கும். சில பாடல்கள் இடைக்காடர் ஊசிமுறியென்று பழைய உரைகளிற் காணப்படுகின்றன; ஊசிமுறியெனப் பெரிய நூலொன்று இவராற் செய்யப் பட்டிருந்ததென்று தெரிகின்றது; ஊசி - எழுத்தாணி. இவர், ஒரு பாண்டியன் மீது சில பாடல்களைப் பாடிக்கொண்டு சென்று அவனைக் கண்டு தெரிவித்தபொழுது அவன் அவற்றை மதியாதிருந்தமைகண்டு மனம் நொந்து உடனே ஆலவாயடிகளையடைந்து குறையிரந்து நிகழ்ந்ததனை விண்ணப்பித்து வடபாற்சென்று ஓரிடத்திருப்ப, அவரும் சங்கப் புலவர்களும் இவர்பின் சென்று இவருடன் இருந்தாரென்றும், இந் நிகழ்ச்சியை யறிந்த பாண்டியன் மனங்கலங்கி இவரையடைந்து குறையிரந்து இவர்மனவருத்ததைத் தீரத்தானென்றும் இருவகைத் திருவிளையாடல்களிலும் ஒருசரித்திரம் வழங்குகின்றது; “திருந்திய செல்வ மதுரைச் செழியன்முன் சென்றடியேன், அருந்தமிழ் பாடினன் றள்ளின னேயென் றவன்செல்லவே, கரும்பன சொல்லி யுடன்வட பாலிடைக் காடனுக்காப், பரிந்துபின் போனசொக் கேபர தேசி பயகரனே” (திருவிளையாடற்பயகரமாலை, 20) , “கூறுமிடைக்காடனியற் கவிதை பாடிக் கொடுகாண மன்னிகழ்ந்து தள்ள நொந்தே, வீறுயரா லயத்தணுகிப் பொருணீ சொல்லுன்மெல்லியென மறைபுகலு மிகழ்ந்த துன்னை, மாறகலுன் றேவியைமற்றிலையென் றேத்தி வரைந்தேக யானுமே குவலென் றேகி, ஏறியசங்கத்தொடிருந் தழைப்பப் போந்தா னிடத்தைவட திருவால வாயென்றார்கள்” (கடம்பவன புராணம், இலீலாசங்கிரக அத்தியாயம், 20) என்பவற்றாலும் இவ்வரலாறு அறியப்படும். இவராற் பாடப்பட்டோன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். எட்டுத் தொகையில் இவர் இயற்றிய செய்யுட்கள் - 11 (புறநா. 1, அகநா. 6, நற். 3. குறுந். 1) .