/ Tamil Pulvarkal / சேரமான் …

சேரமான் கணைக்காலிரும்பொறை

    • இவன் சோழன் செங்கணானொடு போர்செய்து பிடிக்கப்பட்டுக் குடவாயிற்கோட்டச் சிறையிற் கிடந்து தண்ணீர் தாவென்று கேட்டு உடனே பெறாது பின்பு பெற்று அதனை மானத்தால் உண்ணாது கைக்கொண்டிருந்து, “குழவியிறப்பினும்’ என்னும் பாடலைப் பாடித் தன்கருத்தைப் புலப்படுத்தி அப்பால் துஞ்சினான்.

சேரமான் கோட்டம்பலத்துத்துஞ்சிய மாக்கோதை

  • இவன், தன் மனைவி யிறந்தபொழுது பிரிவாற்றாது, “யாங்குப்பெரி தாயினும்” என்னும் பாடலைப் பாடினான்.

சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை

  • இவன் சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளியின் பகைவன்; உறையூர் ஏணிச்சேரி முடமோசியாருடைய நண்பன்.

சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்

  • இவன் போரில் வல்லவன்; இவனைப் பாடிய புலவர் பரணர். பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தை யேற்று அதனைப் பாடிய பரணர்க்கு உம்பற்காட்டுவாரியையும் தன் மகன் குட்டவன்சேரலையும் பரிசில் கொடுத்தோன் இவனே. இவன் கடலோட்டிய வரலாறு, “கோடுநரல் பௌவங் கலங்க வேலிட், டுடை திரைப் பரப்பிற் படுகடலோட்டிய, வெல்புகழ்க் குட்டுவன்” (பதிற். 46) . “மட்டவிழ் தெரியன் மற்போர்க் குட்டுவன், பொருமுரண் பெறாஅது விலங்குசினஞ் சிறந்து, செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி, ஓங்கு திரைப் பௌவ நீங்க வோட்டிய, நீர்மா ணெஃகம்” (அகநா. 212) , “கொடும்போர் கடந்து நெடுங்கட லோட்டி” (சிலப். 28 : 119) , “பொங்கிரும் பரப்பிற் கடல்பிறக் கோட்டி” (சிலப். 30 : கட்டுரை, 19) , என்பவற்றாலும் அறியலாகும். இவன் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனெனவும் வழங்கப்படுவன்.

சேரமான் கடுங்கோவாழியாதன்

  • இவன் சிறந்த வீரன்; பதிற்றுப்பத்தில், கபிலர்பாடிய ஏழாம்பத்தைக் கேட்டு அவருக்கு நூறாயிரம் காணமும், ஒரு மலைமீதேறிக்கண்ட நாடும் பரிசிலாகக் கொடுத்தனன். இதனைப் பதிற்றுப்பத்து, 7-ஆம் பத்தின் பதிகத்தால் உணர்க. இவனைப் பாடிய புலவர்: கபிலர்.

சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரலிரும்பொறை

  • இவனைக் கண்டபொழுது நரிவெரூஉத்தலையார்க்குப் பழைய நல்லுடம்பு கிடைத்தது; இவனைப் பாடிய புலவர் அவரே.

சேரமான் குடக்கோச் சேரலிரும்பொறை

  • இவன் பெயர் குடக்கோ இளஞ்சேரலிரும்பொறையெனவும் வழங்கும்; பதிற்றுப்பத்தில், ஒன்பதாம் பத்திற்குத் தலைவன் இவனே; இவனைப் பாடியவர் பெருங்குன்றூர்கிழார்.

சேரமான் குடக்கோநெடுஞ் சேரலாதன்

  • இவன் சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளியொடு போர்செய்து இறந்தான். அக்காலத்து அக்களத்தில் இவனைப் பாடிய புலவர்கள்; கழாத்தலையார், பரணர்.

சேரமான் கோக்கோதைமார்பன்

  • இவன் சிறந்த கொடையாளி; இவன் நகரம் தொண்டியென்பது; இவனைப் பாடிய புலவர் பொய்கையார்; “கோதை மார்ப னுவகையிற் பெரிதே” (அகநா. 346) . இவன் நக்கீரனாராலும் பாராட்டப்பெற்றவன்.

சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோவாழியாதன்

  • இவன் சிறந்த கொடையாளி; மிக்க வீரமுடையவன். இவனைப் பாடிய புலவர் குண்டுகட்பாலியாதனார்.

சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்

  • இவன் புலவர்பால் மிக்க நேயமுடையோன். இவனைப் பாடிய புலவர் கபிலர்.

சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை

  • இவன், தன் முரசுகட்டிலின்மேல் அறியாமல் ஏறித் துயின்ற மோசிகீரனாரைத் துன்பஞ் செய்யாமல் அவன் எழுமளவும் கவரிகொண்டு வீசியதனால் அவராற் புகழ்ந்து பாடப்பெற்றான். பதிற்றுப்பத்துள் எட்டாம்பத்திற்குத் தலைவன் இவனே. அதுபாடிய அரிசில்கிழார்க்கு ஒன்பதுநூறாயிரங் காணம் பரிசில் கொடுத்தான்; அதியமானுடைய தகடூரை வென்றான்; தகடூர் யாத்திரை யென்னும நூல் இவன் காலத்துச் செயயப்பட்டது போலும்.

சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி

  • இவன் அரசர்களுக்கு இன்றியமையாத குணங்கள்பலவும் நிறைந்தவன்; சோழபரம்பரையிற் பிறந்தவன், ஒரு காலத்துச் சேரமானுடைய பாமுளூரை வென்று கைக்கொண்டான். இதனாலேயே இவனுக்கு இப்பெயர் வந்தது; இரப்போரைப் பாதுகாத்தலையே விரதமாக வுடையவன்; இவன் பெயர் சோழன்நெய்தலங்கான லிளஞ்சேட்சென்னி யெனவும் வழங்கும். சேரமான் பாமுளூரென்பதற்குச் சேரமானுடைய பாமுளூரென்று பொருள்கொள்க. இவனைப் பாடிய புலவர் ஊன் பொதி பசுங்குடையார்.

சேரமான் பாலைபாடிய பெருங்கடுக்கோ

  • இவன் கொடையும் வீரமும் உடையோன்; பாலைநிலத்தைப் பாடுதலில் ஆற்றல் மிக்கவனாக இருந்ததுபற்றி இவன் இப்பெயர் பெற்றான்; இவன்பெயர் பாலைபாடிய பெருங்கடுங்கோவெனவும் காணப்படுகின்றது. இவனைப் பாடியவர் பேய் மகள் இளவெயினியென்பார்.

சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்

  • இவன், பாரதப் போரிற் பாண்டவர் துரியோதனாதியரென்னும் இருவகையார் சேனைக்கும் உணவளித்தான். இவ்வரலாற்றை, “ஓரைவ ரீரைம் பதின்ம ருடன் றெழுந்த, போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த, சேரன்பொறையன் மலையன் றிறம்பாடிக், கார்செய் குழலாட வாடாமோ வூசல், கடம்பெறிந்த வாபாடி யாடாமோ வூசல்” என்னும் சிலப்பதிகார வாழ்த்துக் காதைச் செய்யுளும் புலப்படுத்தும், இதனாலேயே இவன் இப்பெயர் பெற்றான். இவனைப் பாடிய புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர்.

சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறை

  • கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை யென்னும் பெயரைப் பார்க்க. மாந்தரன் - ஒரு சேரன் (பதிற். 90) ; “இலமல ரன்ன வஞ்செந் நாவிற், புலமீக் கூறும் புரையோ ரேத்தப், பலர்மேந் தோன்றிய கவிகை வள்ளல், நிறையருந் தானை வெல்போர் மாந்தரன், பொறையன்”(அகநா. 142) ; அம்மாந்தரன் புதல்வனாதலின் இவனுக்கு இப்பெயர் வாய்ந்தது. இவன் காலத்துப் புலவர் வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார்.

சேரமான் மாரிவெண்கோ

  • இவன் காலத்தரசர்: பாண்டியன் கானப்பேரெயில்கடந்த உக்கிரப்பெரு வழுதியும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியுமாவர்; இவனைப் பாடியவர் ஒளவையார்.

சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை

  • கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறையென்னும் பெயரைப் பார்க்க. இதனை ஒட்டுப்பெயரென்பர் (இ. வி. சூ. 38, உரை) . இவனைப் பாடிய புலவர் குறுங்கோழியூர்கிழார். இவனுடைய பிற வரலாறுகள் ஐங்குறுநூற்றிற் காணலாகும்.

சேரமான் வஞ்சன்

  • இவன் பரிசிலர்க்கு வேண்டியவற்றைக் கொடுப்போன்; இவனைப் பாடிய புலவர் திருத்தாமனார்.