/ Tamil Pulvarkal / குட்டுவன் …

குட்டுவன் கீரனார்

    • குட்டுவன் - குட்டநாட்டில் உள்ளவன்; கீரனாரென்பது இவரது இயற்பெயர். கீரனாரென்னும் பெயருள்ள புலவர் சிலர் இருத்தலின் இவர் பெயர்க்குத் தேயப்பெயரை அடைமொழியாக்கினர் போலும்; சிறந்த உபகாரியாகிய ஆய்அண்டிரன் தன் உரிமை மகளிரோடு தேவலோகத்தை அடைந்தமையால் புலவர்கள் மிக்க பசியையுடையவர்களாகி அயல்நாடு செல்லுவதாக வருந்திக் கூறியிருத்தலின் இவர் அவனிறந்த பின்பும் இருந்தவரென்று தெரிகின்றது.

சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்

  • இவன் போரில் வல்லவன்; இவனைப் பாடிய புலவர் பரணர். பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தை யேற்று அதனைப் பாடிய பரணர்க்கு உம்பற்காட்டுவாரியையும் தன் மகன் குட்டவன்சேரலையும் பரிசில் கொடுத்தோன் இவனே. இவன் கடலோட்டிய வரலாறு, “கோடுநரல் பௌவங் கலங்க வேலிட், டுடை திரைப் பரப்பிற் படுகடலோட்டிய, வெல்புகழ்க் குட்டுவன்” (பதிற். 46) . “மட்டவிழ் தெரியன் மற்போர்க் குட்டுவன், பொருமுரண் பெறாஅது விலங்குசினஞ் சிறந்து, செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி, ஓங்கு திரைப் பௌவ நீங்க வோட்டிய, நீர்மா ணெஃகம்” (அகநா. 212) , “கொடும்போர் கடந்து நெடுங்கட லோட்டி” (சிலப். 28 : 119) , “பொங்கிரும் பரப்பிற் கடல்பிறக் கோட்டி” (சிலப். 30 : கட்டுரை, 19) , என்பவற்றாலும் அறியலாகும். இவன் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனெனவும் வழங்கப்படுவன்.