/ Tamil Pulvarkal / மதுரை …

மதுரை அளக்கர்ஞாழலார் மகனார் மள்ளனார்

    • அளக்கர்ஞாழ லென்பது ஓரூர். மள்ளர் என்பது வீரரைக் குறிக்கும் சொல். பாண்டிய அரசரால் முதலில் இவர் பாதுகாக்கப்பெற்றவர்; சுக்கிரன் வானத்தில் தென்பாற் காணப்படின் மழை குறையுமென்று இவரறிந்திருந்தவர்; 388 : 1-2. 15-6. இவராற் பாடப்பட்டோன் சிறுகுடிகிழான் பண்ணனென்பவன். ஏனைத்தொகைகளிலும் (அகநா. குறுந். நற்.) இவருடைய பாடல்கள் காணப்படுகின்றன. இப்பெயர் ‘அளக்கர் ஞாழார்’ என்று பிரதிகளிற் காணப்படினும் அது பிழையென்று தோற்றுகின்றது.

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

  • இவர் ஆடை விற்கும் வணிகர்; அறுவை - ஆடை. வேட்டனார் என்ற பெயர்க்காரணம் புலப்படவில்லை. “அரவுறை புற்றத் தற்றே நாளும், புலவர் புன்க ணோக்கா திரவலர்க், கருகா தீயும் வண்மை, உரைசானெடுந் தகை யோம்புமூரே” (329) என்பது இவருடைய பாடற்பகுதி; ஏனைத் தொகைகளிலும் (அகநா. குறுந். நற்.) , திருவள்ளுவமாலையிலும் இவர் பாடல்கள் காணப்படுகின்றன.

மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்

  • கௌசிகனாரென்பது இவரது இயற்பெயர்; ஒருமுனிவர் பெயர் இவருக்கு இடப்பட்டது. பகைவர் சேய்மையிலிருந்தே அஞ்சுதற்குரிய ஒளி தன்பால் அமையப் பெற்ற தலைவனுக்கு நல்லபாம்பு தங்கும் புற்றையும் கொல்லேறு திரிந்துலாவும் மன்றத்தையும் இவர் உவமை கூறியிருக்கின்றார்.

மதுரை ஓலைக்கடைக் கண்ணம்புகுந்தாராயத்தனார்

  • ஓலை - ஓலையால் இயற்றப்பட்ட குடை; தாழை முதலியவற்றின் ஓலையுமாம். இதனால், இவர் வியாபாரஞ் செய்பவரென்று தெரிகிறது; இவர் பாடிய மகட்பாற்காஞ்சி இன்சுவையுடையது.

மதுரை நக்கீரர்

  • நிலையாமையை இவர் எடுத்துக்காட்டி யிருக்குமுறை மிக அழகிது; 365. இவர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனால் ஆதரிக்கப் பெற்றவர்; கபிலருக்கும் வேள்பாரிக்கும் காலத்தாற் பிற்பட்டவர்; அகநா. 36, 78.

மதுரை மருதனிள நாகனார்

  • இவராற் பாடப்பட்டோன், பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்; இவர் பாடலில், திரி புரவிசயமும், திருச்செந்தூரில் முருகக்கடவுள் எழுந்தருளிய துறைக் கண்ணுள்ள மணற்குவியல்களும் பாராட்டப்பெற்றுள்ளன. இறையனாரகப் பொருளுக்கு நல்லுரையியற்றியவர்களுள் இவருமொருவர். ‘உருத்திரசன்மன். . . . எல்லாரும் முறையே உரைப்பப் கேட்டு வாளாவிருந்து மதுரை மருதனிளநாகனார் உரைத்த விடத்து ஒரோவழிக் கண்ணீர்வார்ந்து மெய்ம்மயிர் நிறுத்தி…….இருந்தான்’ (இறை. முதற் சூத்திரவுரை) என்பதனால், அவ்வுரையின் பெருமை விளங்கும். இவர் பாடல்கள் ஏனைத் தொகைகளிலும் (அகநா. குறுந். நா.) காணப்படுகின்றன.

மதுரை வேளாசான்

  • வேள் - யாகஞ்செய்யுந் தொழிலின் பெயராகிய வேட்டலென்பதன் முதனிலை; ஆசான் - ஆசிரியன். ஒரு வேந்தனிடமிருந்து மற்றொரு வேந்தன்பால் அந்தணன் தூதுசெல்லுதற்குரிய னென்பது இவர் பாடலால் தெரியவருகின்றது.