/ Tamil Pulvarkal / பாண்டியன் …

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

    • இவன் கற்றோர்பால் மிக்க மதிப்புடையவனென்றும், கற்றலையே பெரும்பயனாக எண்ணியவனென்றும் இவன்பாடிய பாடல் விளக்கும்; சிலப்பதிகாரக் கதாநாயகனாகிய கோவலனைக் கொல்வித்தவன் இவனே. இதனை அந்நூல் மதுரைக்காண்டத்தின் இறுதிக்கட்டுரையால் உணர்க.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

  • இவன் பகைவரை வெல்லுதலிற் சிறந்தவனென்பதும், குடிகளைப் பாதுகாத்தலில் வன்மையுடையோனென்பதும், புலவர்களால் மதிக்கப்படுதலில் மிக்க நாட்டமுடையோனென்பதும், இரப்போர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்தலையுடையோனென்பதும் இவன் பாடியபாட்டால் விளங்குகின்றன. இவன் பாடப்பட்டவருள்ளும் ஒருவனாவன்; இவன் வரலாற்றை அவர் வரிசையிற் காண்க.

பாண்டியன் அறிவுடை நம்பி

  • இவன் சிறந்த அறிவுடையோன்; இவன் காலத்து புலவர் பிசிராந்தையார்.

பாண்டியன் இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறன்

  • இவன் தமிழ் நாட்டரசர் மூவரிலும் மேம்பட்டு விளங்கினோன். இவனைப் பாடியவர்கள்: மதுரை மருதனிளநாகனார், மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், ஆவூர் மூலங்கிழார், இடைக் காடனார், வடமவண்ணக்கன் பேரிசாத்தனார். பாண்டியன் கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதி
  • இவன் மிக்க வீரமும் கொடையுமுடையோன். இவனைப் பாடிய புலவர் இரும்பிடர்த் தலையார்.

பாண்டியன் கானப்பேர்தந்த உக்கிரப்பெருவழுதி

  • இவனைப் பாடியவர் ஒளவையார். கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி யென்னும் பெயரைப் பார்க்க.

பாண்டியன் கீரஞ்சாத்தன்

  • இவன் வந்தோர்க்கு அன்புடன் உணவளிப்போன்; சிறந்த வீரன்; இவன் பெயர் பாண்டிக்குதிரைச் சாக்கையனெனவும் பிரதிகளிற் காணப்படுகின்றது. இவனைப் பாடியவர் ஆவூர் மூலங்கிழார்.

பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி

  • இவன் மிக்க வீரச்செல்வமுடையோன்; வடநாட்டரசரை வென்று அடிப்படுத்தினோன். இவனைப்பாடிய புலவர்கள்: ஐயூர்முடவனார், மருதனிளநாகனார்.

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்

  • இவன் தன்னைச்சேர்ந்தோருக்கு மிக்க நன்மையும் பகைவருக்குத் துன்பமும் புரிபவன்; இவனைப் பாடியவர்: மதுரைக்கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

  • இவன் வரலாற்றைத் தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுங் செழியனென்பதிற் காண்க.

பாண்டியன் நெடுஞ்செழியன்

  • இவனைப் பாடிய புலவர் குடபுலவியனார்.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி

  • இவன் அநேக யாகங்களைச் செய்தவன்; பல பகைவர்களையும் அறப்போரால் வென்று மறக்கள வேள்வி புரிந்தோன்; பெரிய வள்ளல்; சிவபெருமானிடத்து மிக்க பக்தியுடையோன்; இவனைப் பாடியவர்கள்: காரிகிழார், நெட்டிமையார், நெடும்பல்லியத்தனார்; பெருந்தோட் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி யெனவும் இவன் பெயர் வழங்கும்; ‘பெருந்தோட் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி ’ (தொல். கிளவி. சூ. 26, சே. மேற்.)

பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி

  • இவன் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருமாவளவனோடு நட்புடையவன்; இவன் காலத்துப் புலவர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்.

வடிம்பலம்பநின்ற பாண்டியன்

  • இவன் கடற்றெய்வத்திற்குப் பெரியதொரு விழவு செய்தான்; பஃறுளியாற்றை உண்டாக்கினான். இன்னும் இவன் பெருமையை மதுரைக்காஞ்சியாலும், சிலப்பதிகாரத்தாலும் உணர்க.