/ Tamil Pulvarkal / கடலுண்மாய்ந்த …

கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி

    • இவர் பாண்டியர் குடியிற் பிறந்தவர்; வழுதியாரென்ற பெயரே இதனைப் புலப்படுத்தும். பரிபாடலில் திருமாலுக்குரிய 15-ஆம் பாடலை இயற்றிய இளம்பெருவழுதியார் என்பவரும் இவரும் ஒருவராகவே கருதப்படுகின்றனர்; பரோபகாரச் செய்திகூறல் முதலிய கருத்துக்களில் இருவர் பாடல்களும் ஒத்திருத்தலும் பெயரொற்றுமையும் பிறவும் இக்கருத்தை வலியுறுத்தும். இளம் பிராயத்திலேயே பேரறிவினராக இருந்தது பற்றி இவர் இப்பெயரை அடைந்தனர்போலும்; ஒரு பெரியார்க்குச் சிறுப்பெரியார் என முற்காலத்திற் பெயர் வழங்கிற்று. ‘கடலுண் மாய்ந்த’ என்னும் அடை இறந்த பின்பு இவருடைய பெயரின் முன்னர் அமைக்கப்பெற்றதென்பது சொல்லாமலே விளங்கும்; ‘துஞ்சிய’ என்பதுபோல. சோலைமலையிலுள்ள திருமாலைப் பாடியிருத்தல் பற்றிச் சமயத்தால் இவர் வைணவராகக் கருதப்பெறுகின்றனர். இவர் பாடிய “உண்டாலம்ம” என்னும் இந்நூற்பாடல் சொல்லாலும் பொருளாலும் இனிமை வாய்ந்தது. இவருடைய ஏனை வரலாறுகளைப் பரிபாடற் பதிப்பிற் பாடினோர் வரலாற்றிற் காணலாகும்.