/ Tamil Pulvarkal / மதுரைக் …

மதுரைக் கணக்காயனார்

    • கணக்காயனார் - ஓதுவிப்பார்; “கணக்காயரில்லாத வூரும்” (திரி. 10) . இதனால், இவருடைய தொழில் இன்னதென்று விளங்கும்; திருவருளாற் கிடைத்த சங்கப்பலகையில் முதலில் ஏறி வீற்றிருந்தவரும் நல்லிசைப் புலவர்களின் நடுநாயகமாக விளங்கியவருமான நக்கீரனாருடைய அருமைத் தந்தையார் இவர். இதனாலேயே இவருடைய தவப்பயனும் கல்விப்பெருமையும் விளங்கும்; பகைவருடைய பெருஞ்சேனையைத் தனியே நின்று தடுக்கும் ஒரு வீரனை, “பெருங்கடற் காழி யனையன்”, “தொன்மைசுட்டிய வண்மையோன்” என்று இவர் பாராட்டினர்.

மதுரைக் கணக்காயனார்மகனார் நக்கீரனார்

  • இவரூர் மதுரை; மதுரைக் கணக்காயனாரென்பது இவர் தந்தையார் பெயர். குலம், ஒரு வகை வேதியர் குலமென்பது சிலர்கொள்கை. கடைச்சங்ககாலத்திற் சங்கப்பலகையில் முதலிடத்தை முதலில் ஏற்றவர் இவரே; கீரங்கொற்றனாருடைய தந்தையார்; இந்நூலிற் பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனுக்குச் சிவபிரான், பலதேவர், மாயோன், முருகவேளென்பவர்களை உவமையாக்கி இவர் பாடிய பூவைநிலையும் (56) , பொதுவாகப் பாடிய பொருண்மொழிக்காஞ்சியும் (189) மிக அழகுவாய்ந்தவை. திருமுருகாற்றுப்படையும், நெடுநல்வாடையும் இவர் இயற்றிய நூல்கள். நக்கீரர் நாலடிநாற்பதென்னும் நூலொன்றும் இவர் இயற்றியதாக யாப்பருங்கலவிருத்தி முதலியவற்றால் தெரிகின்றது. இறையனாரகப்பொருளுக்கு முதலுரை கண்டவர் இவரே. இவர் செய்தனவாகச் சில தனிப்பாடல்கள் வழங்குகின்றன. இவர் இயற்றியதாகத் திருக்காளத்தி ஞானப்பூங்கோதை ஸகஸ்ரநாமம் ஒன்று தஞ்சாவூர் அரண்மனைப் புத்தகசாலையிலுள்ளதென்பர். அதனால், இவர் வடமொழியிலும் பயிற்சியுள்ளவரென்று தெரிகின்றது. இவருடைய மாணாக்கர் இவர் புதல்வரான கொற்றனாரென்பவரே. இன்னும் 11-ஆம் திருமுறையில் காணப்படும் கைலைபாதி காளத்திபாதியந்தாதி முதலிய 10 பிரபந்தங்களின் ஆசிரியர் இவரே யென்பாரும் உளர். மதுரைப்பட்டிமண்டபம் (வித்தியாமண்டம்) புகுந்து வடமொழியே சிறப்புடையதென்றும் தென்மொழி இழிந்ததென்றும் கூறிய குயக்கொண்டானென்பவனை இறக்கப்பாடி, சிலர் வேண்ட அவனைப் பிழைப்பிக்கவும் பாடிய ஆற்றல் வாய்ந்தவர். இவருடைய வரலாறு இவரியற்றிய பிரபந்தங்களாலும், தனிப்பாடல்களாலும், திருப்புகழாலும், கல்லாடம் முதலியவற்றாலும், தொல்காப்பியவுரைகளாலும், இறையனாரகப் பொருளுரையாலும், திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், திருவிளையாடல், திருப்பரங்கிரிப்புராணம், சீகாளத்திப் புராணம் முதலியவற்றாலும் நன்கு விளங்கும். இவருடைய திருவுருவம் திருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ முத்துக் குமாரக்கடவுளின் பக்கத்தே எழுந்தருளியிருக்கின்றது; திருவிழாக் காலத்தில் அதற்குப் புறப்பாடு உண்டு.மதுரை மேலைமாசிவீதியின் மேல்சிறகில் நக்கீரர் கோயிலென்று ஒரு கோயில் பெரிதாகவுள்ளது; அது சங்கத்தார் கோயிலெனவும் வழங்கும். ஈங்கோய் மலையென்னும் சிவஸ்தலத்தில் பண்டைக்காலத்தில் ஓரரசர் நக்கீரர் திருவுருவத்தைப் பிரதிட்டை செய்து நிவந்தங்கள் அமைத்தனரென்று அத்தலத்திலுள்ள ஒரு சாஸனம் தெரிவிக்கிறது. நக்கீரராற் பிரதிட்டை செய்யப்பெற்றதாகக் கருதப்படும் ஒரு சிவலிங்கப்பெருமான் நக்கீரநாதர் அல்லது நக்கீரலிங்கம் என்னும் திருநாமத்தோடு திருக்காளத்தியில் எழுந்தருளியிருக்கின்றனர். இவர் வரலாறு இன்னும் விரிப்பிற் பெருகும்.

மதுரைக் கள்ளிற்கடையத்தன் வெண்ணாகனார்

  • வெண்ணாகரென்பது இவரது இயற்பெயர்; இவர் பாடிய வல்லாண்முல்லைத்துறை பொருட் சிறப்புடையது. அகநானூற்றில் ஒரு செய்யுள் இவர் பாடியதாக வுள்ளது.

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்

  • இவர் கூல வியாபாரி; கூலம் - நெல் முதலியவை ; பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனை நோக்கி அவனுடைய இயல்புகளைச் சுருக்கிக் கூறியவர்; 59. பத்தினிக் கடவுளாகிய கண்ணகியின் வரலாற்றையும் அவள் மேம்பாட்டையும் சேரன் செங்குட்டுவனுக்கு அறிவுறுத்தி அவனைக் கொண்டு அவளுக்குக் கோயில் கட்டுவித்து நித்தியபூசை முதலியன நடக்கும்படி செய்தவர். அவ்வரசனுக்குக் கண்ணகியின் வரலாற்றைக் கூறியபொழுது அவனோடு கேட்டுக்கொண்டிருந்தவரும் துறவுபூண்டவருமாகிய இளங்கோவடிகள் அவளுடைய சரித்திரத்தைப் பொருட்டொடர்நிலைச் செய்யுளாகச் செய்தற்கு வேட்கையடையும் வண்ணம் செய்தவரும் இவர்; இதனைச் சிலப்பதிகாரத்தின் பதிகத்தாலும், அந்நூற் காட்சிக் காதையாலும் உணர்க. மணிமேகலை நூலாசிரியர் இவரே; ‘சீத்தலைச்சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேகலை (தொல். செய். சூ. 241, பேர்.) ஏனைத் தொகைநூல்களிலும் (குறுந். அகநா. நற்.) இவர் செய்யுட்கள் உண்டு. திருவள்ளுவமாலையில் இவர் பெயரோடு ஒரு வெண்பா காணப்படுகிறது. இவர் பெயர், மதுரைச் சீத்தலைச் சாத்தனாரெனவும், சீத்தலைச் சாத்தனாரெனவும், சாத்தனாரெனவும் வழங்கும்; “தண்டமிழ்ச் சாத்தன்” (பதிகம், 10) என்றும், “தண்டமி ழாசான் சாத்தன்” (25 : 166) என்றும், “நன்னூற் புலவன்” (25 : 106) என்றும் சிலப்பதிகாரத்து இவர் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றனர். சங்கத்தில் அரங்கேற்றுவித்தற்பொருட்டுவரும் நூல்களிற் பிழைகள் காணப்படுந்தோறும் ஆக்கியோர்களைக் குற்றங்கூறுதற்குத் துணியாராய், ‘இந்தப் பிழைகளைக் கேட்கும்படி நேரிட்டதே’ என்று இவர் மனம் வருந்தித் தமது தலையைக் குத்திக்கொள்வாரென்றும், அதனால் தலை புண்பட்டுச் சீயோடிருந்தமையின், சீத்தலைச் சாத்தனாரென்பது இவர்க்குப் பெயராயிற்றென்றுங் கூறி, “வள்ளுவர்முப் பாலாற், றலைக்குத்துத் தீர்வு சாத்தற்கு” என்று மருத்துவன் றாமோதரனார் திருக்குறளைச் சிறப்பித்துக் கூறிய செய்யுளை ஆதாரமாகக் காட்டுவர் ஒருசாரார்; ‘சீத்தலைச் சாத்தன், கொடும்புறமருதியென்பன, சினைப்பெயரொடு தொடர்ந்து வரும் முதற்பெயர்’ (தொல். பெயர். சூ. 20, இளம்.) என்பது இக்கருத்தை வலியுறுத்தும். சிலப்பதிகாரத்தை இவர் கேட்டனரெனச் சிலப்பதிகாரப் பதிகத்து இறுதியிலும், மணிமேகலையைச் சிலப்பதிகார நூலாசிரியர் கேட்டனரென அந்நூற்பதிகத்து இறுதியிலும் கூறியிருத்தலால், இளங்கோவடிகளும் இவரும் ஒரேகாலத்தினரென்பது அறியப்படுகின்றது. சீத்தலையென்னும் ஓர் ஊரிலுள்ள ஐயனார் பெயராகிய சீத்தலைச் சாத்தனாரென்பது இவரது இயற்பெயரென்பது ஒரு சாரார் கொள்கை; உண்மை விளங்கவில்லை. இவரைப்பற்றி பிறவரலாறுகளை மணிமேகலைப் பதிப்பிற் காணலாம்.