/ Tamil Pulvarkal
/ உறையூர் …
உறையூர் இளம்பொன் வாணிகனார்
-
- இவர் வணிகர்; ஒரு வீரனுடைய கொடைச்சிறப்பும் போரில் இறந்த பின்பு அவனுக்காக நட்ட வீரக்கல்லின் கோலமும் அவனை இழந்தமையாற் பாணர்கள் படுந் துன்பமும் இவராற் கூறப்பட்டிருக்கின்றன.
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
- இவர் அந்தணர்; சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறையால் ஆதரிக்கப் பெற்றவர்; இவை முறையே “ஊரும்பேரும்” (தொல். மரபு. 74, பேர்) என்பதன் விசேடவுரையாலும், ‘சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறையோடு வேண்மாடத்திலிருந்து’ (புறநா. 13) என்பதனாலும் பெறப்படுகின்றன; போர்க்களத்திற் பகைவரது சேனையைப் பிளந்துகொண்டு வாள்வீரர்க்கிடையே தன்தலைமை தோன்றச்செல்லும் சோழன்களிற்றிற்குக் கடலைக் கிழித்துச்செல்லும் நாவாயையும், விண்மீன்களுக்கு இடையே விளங்கும் திங்களையும் இவர் உவமை கூறியிருக்கின்றார்; புறநா. 13. ஆய் என்னும் வள்ளலுடைய கொடைச்சிறப்பும் வீரசிறப்பு முதலியனவும் இவராற் பலபடியாகப் புனைந்து பாராட்டப்பெற்றுள்ளன; இதுபற்றியே, “திருந்துமொழி மோசிபாடிய ஆயும்” (158) எனப் பெருஞ்சித்தினார் என்னும் புலவர் இவரைப் பாராட்டியுள்ளார்; இதிலுள்ள ‘திருந்து மொழி’ என்னும் அடைமொழி இவருடைய சிறந்த புலமையை வெளியாக்குகின்றது; இவராற் பாடப்பெற்றோர் சோழன் முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளியும், ஆயுமாவார்; ஆய் இறந்த பின்பும் இருந்தவர் இவர். இவர்பெயர் மோசி; ஏணிச்சேரி முடமோசியார் எனவும் வழங்கும். இவர் இயற்றிய புறநானூற்றுச் செய்யுட்கள் - 14.
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
- ‘முதுகண்’ என்பது பிராயத்தாலும் அறிவாலும் முதிர்ந்து, அரசர்க்கும் பட்டத்தேவிகளுக்கும் உசாத்துணையாக இருந்து நீதிகளைச் செவியறிவுறுத்தும் ஆண்பாலார் பெண்பாலார்க்குரிய பெயராகச் சிலாசாசனம் முதலியவற்றிற் காணப்படுகின்றது; “முற்றிழை மகளிர்க்கு முதுக ணாமென” (பெருங். 1. 36 : 198) என வருதலும் காண்க; இவர், உறையூர் அரசர் பால் அத்தொழிலை உடையவராக இருந்தார்போலும்; இவராற் பாடப்பட்டோன் சோழன் நலங்கிள்ளி; இவர்காலத்துப் புலவர் அவனைப் பாடிய ஆலத்தூர்கிழாரும் கோவூர்கிழாரும்; இவர் சிறந்த குடியிற் பிறந்தவருக்குத் தாமரைப்பூக்களையும், வளர்தல் முதலியவற்றை யடைந்தபொருள் குறைதல் முதலியவற்றையடையுமென்பதற்குத் திங்களையும் உவமைகூறியிருத்தலும், அருளுங் கொடையும் வெற்றிக்கும் அவையின்மை தோல்விக்கும் காரணமென்பது புலப்பட, “அருளவல்லை யாகுமதி யருளிலர், கொடாமை வல்ல ராகுக, கெடாத துப்பினின் பகை யெதிர்ந்தோரே” (27) என விளக்கியிருத்தலும் நன்கு மதிக்கற்பாலன. இவர் செய்தனவாக 6-செய்யுட்கள் உள்ளன : குறுந். 1; புறநா. 5.
உறையூர் முதுகூத்தனார்
- இப்பெயர் முதுகூற்றனாரெனவும் சில பிரதிகளிற் காணப்படுகின்றது; “வென்றெறி முரசின் விறற்போர்ச் சோழர், இன்கடுங் கள்ளி னுறந்தை” (அகநா. 137) என இவரே கூறியிருத்தலால் தம்முடைய ஊரில் இவர் அன்புடையரென்பதும், அவ்வூர் அரசராகிய சோழரால் நன்கு மதிக்கப்பெற்றவரென்பதும் வெளியாகின்றன; “உள்ளது, தவச்சிறி தாயினு மிகப்பல ரென்னாள், நீணெடும் பந்த ரூண்முறையூட்டும், இற்பொலி மகடூஉ” (331) எனக் கற்புடை மங்கையினியல்பையும், “தேவிற் சிறந்த திருவள் ளுவர்குறள்வெண்பாவிற் சிறந்திடுமுப் பால்பகரார் - நாவிற், குயலில்லை சொற்சுவை யோர்வில்லை மற்றுஞ், செயலில்லை யென்னுந் திரு” (திருவள். 39) எனத் திருக்குறளின் சிறப்பையும் பாராட்டியிருத்தல் மதிக்கற் பாலது; இவர் வாக்கிற் பெரும்பாலுங் காணப்படுவது பாலை நிலத்தினியல்பு; இவர் செய்தனவாக 6 பாடல்கள் தெரிகின்றன : அகநா. 2; குறுந். 2; திருவள். 1; புறநா. 1.