/ Tamil Pulvarkal
/ உறையூர்மருத்துவ …
உறையூர்மருத்துவன் தாமோதரனார்
-
- இவர் மருத்துவன்றாமோதரனார் எனவும் வழங்கப்பெறுவர்; மருத்துவர் - மருத்துவ நூலில் வல்லவர்; வைத்தியர். இது, “சீந்திநீர்க் கண்டந் தெறிசுக்குத் தேனளாய், மோந்தபின் யார்க்குந் தலைக்குத்தில் - காந்தி, மலைக்குத்து மால்யானை வள்ளுவர்முப் பாலாற், றலைக்குத்துத் தீர்வுசாத்தற்கு” (திருவள். 11) என்னும் வெண்பாவால் விளங்குகின்றது; தாமேதரனாரென்பது தெய்வத்தால் வந்த பெயர்; இதனால், இவர் குடும்பத்தினர் திருமாலின் அடியவராகக் கருதப்படுகின்றனர்; இவர் செய்தனவாக 6 - பாடல்கள் கிடைக்கின்றன : அகநா. 2; திருவள். 1; புறநா. 3 இவராற் பாடப்பட்டோர் சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திரு மாவளவன், பிட்டங் கொற்றனென்பார். இவர் வாக்கிற் பாலை நிலத் தினியல்பும் ஏற்ற உவமையணிகளும் காணப்படுகின்றன; “முந்நீர் நாப்பட் டிமிற்சுடர் போலச், செம்மீ னிமைக்கு மாக விசும்பு” (60) , “கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும், ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கும், உரனுடை நோன்பகட்டன்ன வெங்கோன்” (60) , “உலைக்கல் லன்னவல் லாளன்” (170) என்பவை இந்நூலுள் இவர் வாக்கிற் சிறந்த பகுதிகள்.