/ Tamil Pulvarkal / உறையூர் …

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

    • இவர் அந்தணர்; சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறையால் ஆதரிக்கப் பெற்றவர்; இவை முறையே “ஊரும்பேரும்” (தொல். மரபு. 74, பேர்) என்பதன் விசேடவுரையாலும், ‘சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறையோடு வேண்மாடத்திலிருந்து’ (புறநா. 13) என்பதனாலும் பெறப்படுகின்றன; போர்க்களத்திற் பகைவரது சேனையைப் பிளந்துகொண்டு வாள்வீரர்க்கிடையே தன்தலைமை தோன்றச்செல்லும் சோழன்களிற்றிற்குக் கடலைக் கிழித்துச்செல்லும் நாவாயையும், விண்மீன்களுக்கு இடையே விளங்கும் திங்களையும் இவர் உவமை கூறியிருக்கின்றார்; புறநா. 13. ஆய் என்னும் வள்ளலுடைய கொடைச்சிறப்பும் வீரசிறப்பு முதலியனவும் இவராற் பலபடியாகப் புனைந்து பாராட்டப்பெற்றுள்ளன; இதுபற்றியே, “திருந்துமொழி மோசிபாடிய ஆயும்” (158) எனப் பெருஞ்சித்தினார் என்னும் புலவர் இவரைப் பாராட்டியுள்ளார்; இதிலுள்ள ‘திருந்து மொழி’ என்னும் அடைமொழி இவருடைய சிறந்த புலமையை வெளியாக்குகின்றது; இவராற் பாடப்பெற்றோர் சோழன் முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளியும், ஆயுமாவார்; ஆய் இறந்த பின்பும் இருந்தவர் இவர். இவர்பெயர் மோசி; ஏணிச்சேரி முடமோசியார் எனவும் வழங்கும். இவர் இயற்றிய புறநானூற்றுச் செய்யுட்கள் - 14.