/ Tamil Pulvarkal
/ ஓய்மான் …
ஓய்மான் நல்லியக்கோடன்
- இவன், ஓய்மானாட்டு நல்லியக் கோடனெனவும் வழங்கப்படுவன். இவன் ஒரு சிற்றரசன்; சிறுபாணாற்றுப்படைத் தலைவன்; இவன்காலத்தில் இவனைப்போன்ற பெருங்கொடையாளிகள் யாரும் இலரென்று தெரிகின்றது. பேகன் முதலிய ஏழுவள்ளல்களுக்கும் இவன் காலத்தாற் பிந்தியவன்; இவை, அப்பாட்டிலுள்ள, “வஞ்சியும் வறிதே”,
- “மதுரையும் வறிதே”, “உறந்தையும் வறிதே” என்பவற்றாலும் அதன் 84-ஆம் அடி முதலியவற்றாலும் விளங்கும். இவன் பரம்பரையில் ஓய்மான் நல்லியாதன், ஓய்மான்வில்லையாதனென்ற இரண்டு உபகாரிகள் இருந்து விளங்கினார்களென்று இந்நூலால் தெரிகின்றது. இவனைப் பாடிய நல்லிசைப் புலவர்கள்; நல்லூர் நத்தத்தனாரும், புறத்திணைநன்னாகனாருமாவார். கிடங்கிலென்னும் ஊரும் திருத்திண்டீசுவரமும் (திண்டிவனமும்) , ஓய்மானாட்டில் உள்ளனவென்று தென்னிந்திய சிலாசாசனத்தின் 3-ஆம் தொகுதி, 2-ஆம் பகுதி, 201-ஆம் பக்கத்திலுள்ள சாசனத்தால் தெரிகின்றது; கிடங்கில் (சிறுபாண். 160) என்பது திண்டிவனத்தைச் சார்ந்த ஊர்களுளொன்று; இக்காலத்துக் கிடங்காலென வழங்கும்; யாப்பருங்கலவிருத்தியின் மேற் கோளாகிய “கிடங்கிற் கிடங்கில்” என்னும் வெண்பாவில் வந்துள்ள கிடங்கிலென்னு மூர் இதுவே. இவ்வூரிற் சிதைந்த அகழியும் இடிந்த கோட்டையும் இன்றும் காணப்படுகின்றன. இவனுடைய ஊர்களுள் ஒன்றாகிய மாவிலங்கை (176) புனனாட்டுக்கு வடக்குள்ள அருவாநாடு, அருவாவடதலை நாடென்ற இரண்டும் சேர்ந்த இடமென்று கூறுவர். அவ்வூர் சிறுபாணாற்றுப்படையாலும் இவனதென்று தெரிகின்றது. இவனுடைய மற்ற ஊர்களுள் எயிற்பட்டினம், வேலூர், ஆமூரென்பவை தொண்டைநாட்டிலுள்ள இருபத்துநான்கு கோட்டங்களுள் மூன்று கோட்டங்களுக்குத் தலை நகரங்களாக வுள்ளவை. வேலூர் உப்பு வேலூரென்று இக்காலத்து வழங்குகின்றதென்பர். “உறுபுலித் துப்பினோவியர் பெருமகன்” (சிறுபாண். 122) என்பதனால், ஓவியர்குடியிற் பிறந்தவனென்று எண்ணப்படுகின்றான். ஓவியர்குடி நாகர் வகுப்பினுள் ஒரு பிரிவென்பர். இவன்பெயர் ஏறுமா நாட்டு நல்லியக்கோடனெனவும் வழங்கும்.