/ Tamil Pulvarkal
/ மதுரைக் …
மதுரைக் கணக்காயனார்மகனார் நக்கீரனார்
-
- இவரூர் மதுரை; மதுரைக் கணக்காயனாரென்பது இவர் தந்தையார் பெயர். குலம், ஒரு வகை வேதியர் குலமென்பது சிலர்கொள்கை. கடைச்சங்ககாலத்திற் சங்கப்பலகையில் முதலிடத்தை முதலில் ஏற்றவர் இவரே; கீரங்கொற்றனாருடைய தந்தையார்; இந்நூலிற் பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனுக்குச் சிவபிரான், பலதேவர், மாயோன், முருகவேளென்பவர்களை உவமையாக்கி இவர் பாடிய பூவைநிலையும் (56) , பொதுவாகப் பாடிய பொருண்மொழிக்காஞ்சியும் (189) மிக அழகுவாய்ந்தவை. திருமுருகாற்றுப்படையும், நெடுநல்வாடையும் இவர் இயற்றிய நூல்கள். நக்கீரர் நாலடிநாற்பதென்னும் நூலொன்றும் இவர் இயற்றியதாக யாப்பருங்கலவிருத்தி முதலியவற்றால் தெரிகின்றது. இறையனாரகப்பொருளுக்கு முதலுரை கண்டவர் இவரே. இவர் செய்தனவாகச் சில தனிப்பாடல்கள் வழங்குகின்றன. இவர் இயற்றியதாகத் திருக்காளத்தி ஞானப்பூங்கோதை ஸகஸ்ரநாமம் ஒன்று தஞ்சாவூர் அரண்மனைப் புத்தகசாலையிலுள்ளதென்பர். அதனால், இவர் வடமொழியிலும் பயிற்சியுள்ளவரென்று தெரிகின்றது. இவருடைய மாணாக்கர் இவர் புதல்வரான கொற்றனாரென்பவரே. இன்னும் 11-ஆம் திருமுறையில் காணப்படும் கைலைபாதி காளத்திபாதியந்தாதி முதலிய 10 பிரபந்தங்களின் ஆசிரியர் இவரே யென்பாரும் உளர். மதுரைப்பட்டிமண்டபம் (வித்தியாமண்டம்) புகுந்து வடமொழியே சிறப்புடையதென்றும் தென்மொழி இழிந்ததென்றும் கூறிய குயக்கொண்டானென்பவனை இறக்கப்பாடி, சிலர் வேண்ட அவனைப் பிழைப்பிக்கவும் பாடிய ஆற்றல் வாய்ந்தவர். இவருடைய வரலாறு இவரியற்றிய பிரபந்தங்களாலும், தனிப்பாடல்களாலும், திருப்புகழாலும், கல்லாடம் முதலியவற்றாலும், தொல்காப்பியவுரைகளாலும், இறையனாரகப் பொருளுரையாலும், திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், திருவிளையாடல், திருப்பரங்கிரிப்புராணம், சீகாளத்திப் புராணம் முதலியவற்றாலும் நன்கு விளங்கும். இவருடைய திருவுருவம் திருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ முத்துக் குமாரக்கடவுளின் பக்கத்தே எழுந்தருளியிருக்கின்றது; திருவிழாக் காலத்தில் அதற்குப் புறப்பாடு உண்டு.மதுரை மேலைமாசிவீதியின் மேல்சிறகில் நக்கீரர் கோயிலென்று ஒரு கோயில் பெரிதாகவுள்ளது; அது சங்கத்தார் கோயிலெனவும் வழங்கும். ஈங்கோய் மலையென்னும் சிவஸ்தலத்தில் பண்டைக்காலத்தில் ஓரரசர் நக்கீரர் திருவுருவத்தைப் பிரதிட்டை செய்து நிவந்தங்கள் அமைத்தனரென்று அத்தலத்திலுள்ள ஒரு சாஸனம் தெரிவிக்கிறது. நக்கீரராற் பிரதிட்டை செய்யப்பெற்றதாகக் கருதப்படும் ஒரு சிவலிங்கப்பெருமான் நக்கீரநாதர் அல்லது நக்கீரலிங்கம் என்னும் திருநாமத்தோடு திருக்காளத்தியில் எழுந்தருளியிருக்கின்றனர். இவர் வரலாறு இன்னும் விரிப்பிற் பெருகும்.