/ Tamil Pulvarkal / குறுங்கோழியூர் …

குறுங்கோழியூர் கிழார்

  • இவர் வேளாளர்; சேனையை இவர் வருணித்தல் மிக அழகியது; இவராற் பாடப்பட்டோன் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை யென்னுஞ் சேரவரசன்; போரிற் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாற் பிணிப்புண்டு அப்பால் அப்பிணிப்பைத் தானே நீக்கிக்கொண்டு சென்று அவன் சிங்காசனத்திலேறிய வரலாறும், அச்சேரனுடைய வீரமும், செங்கோன் முறைமையும் இவரால் நன்கு கூறப்பெற்றுள்ளன; இவர்பெயர் குறுங் கோளியூர்கிழாரெனவும் வழங்கும்; இவர் பாடல்களுட் சிறந்த பகுதிகளின் கருத்துக்கள் வருமாறு
  • (1) ‘அரச ! ஐம்பூதங்களை அளந்தறிந்தாலும் அறியலாகும் ; உன்னுடைய அறிவு முதலியன அளந்தறிதற்கரியன’; (2) ‘சோற்றை ஆக்குந் தீயாலும் வெயிலாலும் உண்டாகும் வெம்மையை யன்றி உன் குடைநிழலில் வாழ்வோர்க்கு வேறு வெம்மையில்லை’; (3) ‘இந்திரவில்லை யன்றி வேறுகொலைவில்லையும் கலப்பையை யன்றி வேறு படைக்கலங்களையும் உன் நாட்டார் அறியார்’; (4) ‘வயாவுற்ற மகளிர் விரும்பியுண்பாரே யன்றிப் பகைவர் நின் மண்ணை ஒரு பொழுதும் நுகரார்’ (5) ‘உன்னைப் பாடிய நா வேறொருவரையும் பாடாதபடி கொடுக்கும் வண்மையை உடையாய் நீ’; (6) ‘எல்லா வகையாலும் உன் நாடு தேவருலகம் போல்வது’.