/ Tamil Pulvarkal
/ மதுரைக் …
மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
-
- இவர் கூல வியாபாரி; கூலம் - நெல் முதலியவை ; பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனை நோக்கி அவனுடைய இயல்புகளைச் சுருக்கிக் கூறியவர்; 59. பத்தினிக் கடவுளாகிய கண்ணகியின் வரலாற்றையும் அவள் மேம்பாட்டையும் சேரன் செங்குட்டுவனுக்கு அறிவுறுத்தி அவனைக் கொண்டு அவளுக்குக் கோயில் கட்டுவித்து நித்தியபூசை முதலியன நடக்கும்படி செய்தவர். அவ்வரசனுக்குக் கண்ணகியின் வரலாற்றைக் கூறியபொழுது அவனோடு கேட்டுக்கொண்டிருந்தவரும் துறவுபூண்டவருமாகிய இளங்கோவடிகள் அவளுடைய சரித்திரத்தைப் பொருட்டொடர்நிலைச் செய்யுளாகச் செய்தற்கு வேட்கையடையும் வண்ணம் செய்தவரும் இவர்; இதனைச் சிலப்பதிகாரத்தின் பதிகத்தாலும், அந்நூற் காட்சிக் காதையாலும் உணர்க. மணிமேகலை நூலாசிரியர் இவரே; ‘சீத்தலைச்சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேகலை (தொல். செய். சூ. 241, பேர்.) ஏனைத் தொகைநூல்களிலும் (குறுந். அகநா. நற்.) இவர் செய்யுட்கள் உண்டு. திருவள்ளுவமாலையில் இவர் பெயரோடு ஒரு வெண்பா காணப்படுகிறது. இவர் பெயர், மதுரைச் சீத்தலைச் சாத்தனாரெனவும், சீத்தலைச் சாத்தனாரெனவும், சாத்தனாரெனவும் வழங்கும்; “தண்டமிழ்ச் சாத்தன்” (பதிகம், 10) என்றும், “தண்டமி ழாசான் சாத்தன்” (25 : 166) என்றும், “நன்னூற் புலவன்” (25 : 106) என்றும் சிலப்பதிகாரத்து இவர் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றனர். சங்கத்தில் அரங்கேற்றுவித்தற்பொருட்டுவரும் நூல்களிற் பிழைகள் காணப்படுந்தோறும் ஆக்கியோர்களைக் குற்றங்கூறுதற்குத் துணியாராய், ‘இந்தப் பிழைகளைக் கேட்கும்படி நேரிட்டதே’ என்று இவர் மனம் வருந்தித் தமது தலையைக் குத்திக்கொள்வாரென்றும், அதனால் தலை புண்பட்டுச் சீயோடிருந்தமையின், சீத்தலைச் சாத்தனாரென்பது இவர்க்குப் பெயராயிற்றென்றுங் கூறி, “வள்ளுவர்முப் பாலாற், றலைக்குத்துத் தீர்வு சாத்தற்கு” என்று மருத்துவன் றாமோதரனார் திருக்குறளைச் சிறப்பித்துக் கூறிய செய்யுளை ஆதாரமாகக் காட்டுவர் ஒருசாரார்; ‘சீத்தலைச் சாத்தன், கொடும்புறமருதியென்பன, சினைப்பெயரொடு தொடர்ந்து வரும் முதற்பெயர்’ (தொல். பெயர். சூ. 20, இளம்.) என்பது இக்கருத்தை வலியுறுத்தும். சிலப்பதிகாரத்தை இவர் கேட்டனரெனச் சிலப்பதிகாரப் பதிகத்து இறுதியிலும், மணிமேகலையைச் சிலப்பதிகார நூலாசிரியர் கேட்டனரென அந்நூற்பதிகத்து இறுதியிலும் கூறியிருத்தலால், இளங்கோவடிகளும் இவரும் ஒரேகாலத்தினரென்பது அறியப்படுகின்றது. சீத்தலையென்னும் ஓர் ஊரிலுள்ள ஐயனார் பெயராகிய சீத்தலைச் சாத்தனாரென்பது இவரது இயற்பெயரென்பது ஒரு சாரார் கொள்கை; உண்மை விளங்கவில்லை. இவரைப்பற்றி பிறவரலாறுகளை மணிமேகலைப் பதிப்பிற் காணலாம்.