/ Tamil Pulvarkal
/ சோழன்கரிகாற் …
சோழன்கரிகாற் பெருவளத்தான்
- ,இவன் சோழன் உருவப்பஃறேரிளஞ் சேட்சென்னியின் புதல்வன்; பொருந. 130; நாங்கூர் வேளிடை மகட்கொண்டோன்; தொல். அகத்திணை. சூ. 30, ந. தம்முள் மாறுபட்டுவந்து தன்னை இளையனென்றிகழ்ந்த முதியோர் பொருட்டுத் தான் முதியனாய் வந்து அவர்கள் வழக்கைத் தீர்த்தானென்றும், தான் கருவூரிலிருக்கையில், கழுமலமென்னுமுரிலிருந்த யானையாற் கொண்டு வரப்பட்டு அரசாட்சிக்குரியனாயினானென்றும், இளமையில் நெருப்பாற் சுடப்பட்டு உயிர் பிழைத்தானென்றும், இரும்பிடர்த்தலையாரை அம்மானாக உடையானென்றும் பழமொழி 21, 62, 105-ஆம் வெண்பாக்களும் அவற்றின் உரைகளும் விளக்குகின்றன. பொருநராற்றுப்படைக்கும் பட்டினப்பாலைக்கும் தலைவன் இவனே. பட்டினப்பாலை கேட்டுக் கடியலூர் உருத்திரங்கண்ணனாருக்குப் பதினாறுநூறாயிரம் பொன் பரிசளித்தானென்று கலிங்கத்துப்பரணி, இராச பாரம்பரியம் 22-ஆம் செய்யுளால் விளங்குகின்றது. 1வெண்ணியென்னும் ஊர்ப்புறத்தேயுள்ள போர்க் களத்திற் சேரமான் பெருஞ்சேரலாதனோடு போர்செய்து அவனையும் அவனோடு வந்த ஒரு பாண்டியனையும் அக்களத்தில் இவன் வென்றான்; இஃது “இரும்பனம் போந்தைத் தோடுங் கருஞ்சினை, அரவாய் வேம்பினங்குழைத் தெரியலும், ஓங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த, இருபெரு வேந்தரு மொருகளத் தவிய, வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாட், கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்” (143 - 8) என்னும் பொருநராற்றுப்படையால் விளங்குகின்றது. மேற்கூறிய முடிமன்னரிருவரோடு பதினொரு வேளிரையும் அக்களத்தே வென்றானென்று, 1. இவ்வூர் சோழநாட்டில் நீடாமங்கலத்திற்கு மேற்கேயுள்ளது; தேவாரம்பெற்றசிவஸ்தலம்; கோவிலுண்ணியென வழங்கப்படுகின்றது.
- “காய்சின மொய்ம்பிற் பெரும்பெயர்க் கரிகால், ஆர்கலி நறவின் வெண்ணி வாயிற், சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின், இழிமிசை முரசம் பொருகளத் தொழியப், பதினொரு வேளிரொடு வேந்தர் சாய, மொய்வலி யறுத்த ஞான்றைத், தொய்யா வழுந்தூ ரார்ப்பினும் பெரிதே” (அகநா. 246) என்பதனால் தெரிகின்றது. இவன் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து அரசாட்சி செய்தானென்பது, ஒரு காலத்தில் இமயமலைவரையிற் சென்று இடையிலுள்ள அரசர்களை வென்றானென்பதும், சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, பெரியபுராணம், காஞ்சிப்புராணம் முதலியவற்றால் தெரிந்த வரலாறுகள். இவன் வீரருட் சிறந்த வீரன். இவன் பெயர் சோழன் கரிகால்வளவனெனவும், கரிகாலனெனவும், கரிகாலெனவும் வழங்கும்; அகநா. 125, 246. இவனைப் பாடியவர்கள்: கருங்குழலாதனார், வெண்ணிக் குயத்தியார். இவர்களுள் இவன் இறந்த பின்பும் இருந்தவர் கருங்குழலாதனார்.