/ Tamil Pulvarkal
/ பாண்டியன் …
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
-
- இவன் பகைவரை வெல்லுதலிற் சிறந்தவனென்பதும், குடிகளைப் பாதுகாத்தலில் வன்மையுடையோனென்பதும், புலவர்களால் மதிக்கப்படுதலில் மிக்க நாட்டமுடையோனென்பதும், இரப்போர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்தலையுடையோனென்பதும் இவன் பாடியபாட்டால் விளங்குகின்றன. இவன் பாடப்பட்டவருள்ளும் ஒருவனாவன்; இவன் வரலாற்றை அவர் வரிசையிற் காண்க.
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
- இவன் இளமைப்பருவத்தில் தலையாலங்கானத்தில் கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறையோடு போர்செய்து அவனைச் சிறைப்படுத்தியதன்றிச் சேரன், சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என்பவரையும் வென்றான்; வேள் எவ்வியின் மிழலைக்கூற்றத்தையும் பழைய வேளிருடைய முத்தூற்றுக் கூற்றத்தையும கைக்கொண்டான்; மறக்களவேள்வியும் அறக்களவேள்வியும் செய்தான்; செய்யுள் செய்தலில் வல்லவன்; புலவர்களிடத்து மிக்க அன்புள்ளவன்; உத்தமகுணங்கள் பலவும் உடையோன். மாங்குடி மருதனாரியற்றிய மதுரைக்காஞ்சிக்குத் தலைவன் இவனே. “நகுதக்கனரே” (72) என்னுஞ் செய்யுளை இயற்றியவனாதலால், இவன் நல்லிசைப் புலவர் வரிசையில் விளங்கியவனென்று தெரிகின்றது. “பல்யானை மன்னர் முருங்க” (யா, வி. மேற்.) என்னும் பாடலும் இவன் வரலாற்றின் ஒரு பகுதியைத் தெரிவிக்கும். இவன் பெயர் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுங்செழியனெனவும், பாண்டியன் நெடுஞ்செழியனெனவும் வழங்கும். இவனைப் பாடிய புலவர்கள்: குறுங்கோழியூர்கிழார், குடபுலவியனார், கல்லாடனார், மாங்குடிகிழார், இடைக்குன்றூர்கிழார்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
- இவன் வரலாற்றைத் தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுங் செழியனென்பதிற் காண்க.