/ Tamil Pulvarkal / மாறோக்கத்து …

மாறோக்கத்து நப்பசலையார்

    • மாறோக்கம்-கொற்கையைச் சூழ்ந்ததொரு நாடு; ந - சிறப்புப் பொருளைத் தருவதோர் இடைச்சொல். பசலை - கணவனைப் பிரிந்த மகளிருடைய நெற்றி முதலியவற்றில் உண்டாவதாகிய வேறுபட்ட நிறம்; “மணிமிடை பொன்னின் மாமை சாயவென், அணிநலஞ் சிதைக்குமார் பசலை” (நற். 304) , எனப் பசலையின் இயல்பை விளங்கக் கூறியிருத்தலின், இவர் இப்பெயர் பெற்றார்; சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனுடய போர் வென்றியையும் அவன் கொடைமுதலியவற்றையும் சிறப்பித்துப் பாடியுள்ளார். அவன் இறந்தபொழுது இவர் பாடிய பாடல் படிப்பவர் மனத்தை உருக்கும். மலையமான் திருமுடிக்காரியும் அவன் மகன் சோழியவேனாதி திருக்கண்ணனும் கபிலரும் இவராற் பாராட்டப்பெற்றோராவார். இவர் பெண்பாலாரென்று தெரிகிறது; இவர் இயற்றிய செய்யுளொன்று நற்றிணையில் உண்டு.