/ Tamil Pulvarkal
/ அதியமான் …
அதியமான் நெடுமானஞ்சி
-
- இவன் கடையெழுவள்ளல்களிலொருவன்; யுத்தத்திற் பேர்பெற்ற வீரன்; ஒருவகை வீரர்களாகிய மழவர்களுக்குத் தலைவன்; ஒரு காலத்தில், உண்டோரை நெடுங்காலம் சீவித்திருக்கச் செய்யும் கருநெல்லிப்பழத்தைப் பெற்று அதனை ஒளவைக்குக் கொடுத்துப் புகழ்பெற்றவன்; காஞ்சிநகரத்திருந்த தொண்டைமானென்னும் அரசனிடம் ஒளவையைத் தூதுவிடுத்தோன்; சேரமானுடைய உறவினன்; பனைமாலையை யுடையவன்; வெட்சிப் பூவையும் வேங்கைப் பூவையும் அணிவோன்; அரசரெழுவர்க்குரிய ஏழிலாஞ்சனையும் நாடும் அரசவுரிமையு முடையோன்; மேற்கூறிய அரசர் எழுவரோடு பகைத்து மேற்சென்று அவரைப் போரில் வென்றோன்; பரணர் புகழ்ந்து பாடும்படி கோவலூரையும் வென்றான். இவனுடைய ஊர் தகடூர்; இவன் மலை குதிரைமலை; இவன் மகன் பொகுட்டெழினி; இவன் முன்னோர், தேவர்களைப் போற்றி வழிபட்டு விண்ணுலகிலிருந்து கரும்பை இவ்வுலகிற் கொணர்ந்தனர். அவர்களுக்கு வரங்கொடுக்கும் பொருட்டுத் தேவர்கள் வந்து தங்கியதொரு சோலை இவனூரில் இருந்தது. இவன் பெயர் அதிகமான் நெடுமானஞ்சியெனவும், நெடுமானஞ்சி யெனவும், அஞ்சி யெனவும், எழினி யெனவும் வழங்கும்; 158.
- இவன் சேரமான் பெருஞ்சேரலிரும்பொறையால் வெல்லப்பட்டானென்று பதிற்றுப்பத்துள் எட்டாம்பத்தினால் விளங்குகின்றது. ‘ஒருவன்மேற் சென்றுழி ஒருவன் எதிர்செல்லாது தன் மதிற் புறத்து வருந்துணையும் இருப்பின் அஃது உழஞையின் அடங்கும் ; அது சேரமான் செல்வுழித் தகடூரிடை அதியமானிருந்ததாம்‘ (தொல் புறத்திணை. சூ. 7, ந.) என்றதனால் இவனுடைய வரலாற்றின் ஒரு பகுதி அறியப்படுகின்றது. இவனைப் பாடியவர்கள்; ஒளவையார், பரணர், பெருஞ்சித்திரனார், பொன்முடியார்.
நெடுமானஞ்சி
- அதியமான் நெடுமானஞ்சியென்னும் பெயரைப் பார்க்க.
நெடுமானஞ்சி
- அதியமான் நெடுமானஞ்சியென்னும் பெயரைப் பார்க்க.