/ Tamil Pulvarkal
/ பாலைபாடிய …
பாலைபாடிய பெருங்கடுங்கோ
-
- இவர் சேரருள் ஒருவர்; பாடப் பட்டோருள்ளும் ஒருவராவர்; இப்பெயர் சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோவெனவும் வழங்கும். பெருங்கடுங்கோ வென்பது இவரது இயற்பெயர். பாலைத்திணையின் இயல்பை நன்றாக விளக்கிப்பாடுதலில் மிக்க ஆற்றல் வாய்ந்தவராதலின் பாலைபாடியவென்னும் அடைமொழி இவர் பெயருக்குமுன் சார்த்தப் பெற்றது; இதனை ஏனைத்தொகைகளிற் (அகநா. குறுந். நற.்.) காண்க. “வருபடை தாங்கிய கிளர்தா ரகலம், அருங்கட னிறுமார் வயவ ரெறிய, உடம்புந் தோன்றாவுயிர்கெட்டன்றே, … … …சேண் விளங்கு நல்லிசை நிறீஇ, நாநவில் புலவர் வாயு ளானே” என ஒரு வீரனது ஆற்றலை இவர் பாராட்டியிருத்தல் கருதத்தக்கது. இவருடைய பிற வரலாறுகள் பாடப்பட்டோர் பெயர் வரிசையில் அறியலாகும்.
சேரமான் பாலைபாடிய பெருங்கடுக்கோ
- இவன் கொடையும் வீரமும் உடையோன்; பாலைநிலத்தைப் பாடுதலில் ஆற்றல் மிக்கவனாக இருந்ததுபற்றி இவன் இப்பெயர் பெற்றான்; இவன்பெயர் பாலைபாடிய பெருங்கடுங்கோவெனவும் காணப்படுகின்றது. இவனைப் பாடியவர் பேய் மகள் இளவெயினியென்பார்.