/ Tamil Pulvarkal / மலையமான் …

மலையமான் சோழியவேனாதி திருக்கண்ணன்

    • இவன் மலையமானாட்டுள்ள கோவலூர்க்கரசன்; முள்ளூர் மலையையுடையவன்; சோழராசனுக்குப் பேருதவி புரிந்தோன்; இரவலர்க்கு வைப்புத்திரவியம் போன்றவன். இவன் பெயர் மலையமான் சோழியவேனாதி திருக்கிள்ளியெனவும் வழங்கும். இவனைப்பாடிய புலவர் மாறோக்கத்து நப்பசலையார்.

மலையமான் திருமுடிக்காரி

  • இவன் பெண்ணையாற்றங்கரையின் கண் உள்ள மலாடென்று வழங்கும் மலையமானாட்டின் அரசன். கோவலூர் இவனது இராசதானி. தமிழ்நாட்டரசர் மூவர்களுள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருசமயத்து யுத்தத்தில் உதவிபுரிந்தவன்; புலவர்க்குப் பரமோபகாரி; முள்ளூர்மலையையுடையான்; அந்தணர்க்கு நிலங்கொடுத்தோன்; கடையெழுவள்ளல்களில் ஒருவனென்று கூறப்படும் மலையன் இவனே. இவன் குதிரைக்குக் காரியென்று பெயர். மேற்கூறிய வள்ளல்களுளொருவனாகிய ஓரியென்பவனோடு போர்செய்தவன்; இதனை, “காரிக் குதிரைக் காரியொடு மலைந்த, வோரிக் குதிரை யோரியும்” (110-11) என்னும் சிறுபாணாற்றுப்படையாலுணர்க. இன்னும், “துஞ்சா முழவிற் கோவற் கோமான், நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்றுறைப், பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல் கடுக்கும், நெறியிருங்கதுப்பினென்பே தைக்கு” (அகநா. 35) , “முரண்கொடுப்பிற் செவ்வேன் மலையன், முள்ளூர்க் கானம்” (குறுந். 312) , “ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப், பலருடன் கழித்த வொள்வாண் மலையன, தொருவேற் கோடியாங்கு” (நற். 170) எனச் சான்றோர் இவனைப் பாராட்டியிருத்தல் காண்க. இவன்பெயர் மலையமானெனவும் காரியெனவும் மலையனெனவும் வழங்கும். இவனைப்பாடிய புலவர்கள்: கபிலர்; மாறோக்கத்து நப்பசலையார்.

மலையமான் மக்கள்

  • இவர்கள் தம் குலப்பகைவனாகிய சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் தம்மை யானைக்கு இடத்தொடங்கிய பொழுது கோவூர்கிழாராற் பாடி உய்விக்கப்பட்டார்கள்.