/ Tamil Pulvarkal
/ ஐயூர் முடவனார்
ஐயூர் முடவனார்
-
- இவருக்கு முடவனாரென்னும்பெயர் சினையால் வந்தது போலும்; இப்பெயர் ஐயூர்கிழாரெனவும், உறையூர் முடவனாரெனவும் சில பிரதிகளில் உள்ளது. ஐயூர் என்பது சோழநாட்டகத்தோர் ஊர். இவர் நடந்துசெல்லுதற்கு இயலாத முடவராதலின், தாமான் தோன்றிக்கோனை அடைந்து வண்டியிழுத்தற்குப் பகடுவேண்டுமென்று பாடி, அவன்பகடுகளும் பல பசுநிரைகளும் ஊர்தியுங் கொடுக்கப்பெற்று வாழ்ந்தவர்; இறந்தோருடம்பைத் தாழியாற்கவித்தலுண்டென்பதும் வீரச்சிறப்பும் கொடைச்சிறப்பும் இவர் பாடல்களிற் காணப்படுகின்றன. இவராற் பாடப்பட்டோர் ஆதனெழினி, தாமான் தோன்றிக்கோன், சோழன்குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதியென்பார். “அறவரறவன் மறவர் மறவன், மள்ளர் மள்ளன் றொல்லோர் மருகன், இசையிற் கொண்டான்” என்பது இவர் தாமான் தோன்றிக்கோனைப் பாராட்டிய பகுதி. இவர் செய்தனவாக 10 செய்யுட்கள் தொகை நூல்களிற் காணப்படுகின்றன; அகநா. 1; குறுந். 3; நற். 2; புறநா. 4.